மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பள்ளி முதல்வர், செயலாளருக்கு ஜாமீன்!
உடன்குடி பள்ளி மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் பள்ளி முதல்வர் மற்றும் செயலாளர் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி கிறிஸ்தியாநகரம் பகுதியைச் சேர்ந்த பொன்சிங் (42) என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக பள்ளி மாணவிகளை அழைத்து சென்றார். இரவில் அங்குள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். அப்போது, பொன்சிங் மாணவிகள் சிலரிடம் மதுஅருந்தச்சொல்லியும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவிகள் பெற்றோர்களிடம் அளித்த தகவலை தொடர்ந்து பெற்றோர்கள் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை கைது செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கோவையில் தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங்கை கைது செய்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து பொன்சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து நீதிபதி பொன் சிங்கை 15 நாட்கள் பேரூரணி சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்க்கு துணை போனதாக பள்ளி தாளாளர் செய்யது அகமது பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி ஆகியோர் மீதும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது இருவருக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாக வந்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி கைது செய்யப்பட்ட இருவரின் உடல்நிலை குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து இருவருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கினர். இந்த சம்பவங்களை தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.