வாரத்தில் ஐந்து நாள் வேலை அமல்படுத்த கோரி தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – கனரா வங்கி முன்பு 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

வாரத்தில் ஐந்து நாள் வேலை அமல்படுத்த கோரி தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – கனரா வங்கி முன்பு 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இன்று தூத்துக்குடி கனரா வங்கி முன்பு 300-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை திட்டத்தை மத்திய அரசு மற்றும் வங்கி நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

தொழில் நகரமான தூத்துக்குடியில் ஏற்கனவே தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கி விடுமுறை இருந்த நிலையில், இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த போராட்டம் குறித்து பேசிய கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர், வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஐந்து நாள் வேலை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.