தூத்துக்குடி: சொத்தை விற்று பணம் தர மறுத்த தந்தை... கார் எற்றி கொடூரமாக கொலை செய்த மகன்!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகேயுள்ள ஆலந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி.
இவருக்கு 5 மகள்களும், சின்னத்துரை என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், தனித்தனியே வசித்து வருகின்றனர். கருப்பசாமிக்கு சொந்தமாக 6 ஏக்கர் தோட்டம் இதே கிராமத்தில் உள்ளது. இதில், 2 ஏக்கர் நிலத்தை மகன் சின்னதுரைக்கு தெரியாமல் இப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.24 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளாராம்.
அந்த பணத்தை அவரது வங்கிக் கணக்கிலேயே வைத்திருந்தாராம். இந்த நிலையில கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டம் விற்கப்பட்டதை அறிந்த மகன் சின்னதுரை, தந்தை கருப்பசாமியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை கருப்பசாமிக்கும், மகன் சின்னதுரைக்கும் பணம் விவகாரம் தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட தகராறை அக்கம் பக்கத்தினர் விலக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில், கருப்பசாமி, காலை 7 மணியளவில் தன் வீட்டில் இருந்து சவலாப்பேரி செல்லும் ரோடு வழியாக தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காரில் வந்த சின்னதுரை, கருப்பசாமி மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட கருப்பசாமி கை, கால்களில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். கருப்பசாமி மீது மோதிய சின்னதுரை அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார். அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சின்னதுரையை புளியம்பட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், தனக்கு தெரியாமல் தோட்டத்தில் 2 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ததாலும், விற்பனை செய்த பணத்தை தன்னிடம் தர மறுத்ததாலும் ஆத்திரத்தில் கார் ஏற்றி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கைது செய்யப்பட்ட சின்னதுரை, சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.