“டெல்லிக்கு அடிமை கூட்டணியை புறக்கணிக்க வேண்டும்!” – தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் கடும் தாக்கு

“டெல்லிக்கு அடிமை கூட்டணியை புறக்கணிக்க வேண்டும்!” – தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் கடும் தாக்கு

தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், “டெல்லிக்கு அடிமையான கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரநகர் பகுதியில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி , காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகர் செயலாளர் எம். எஸ.முத்து, கவுன்சிலர் முத்துமாரி, மதிமுக முருகபூபதி, சமக அற்புதராஜ், தேமுதிக தயாலிங்கம், விசிக விமல், சிபி ஐ மாடசாமி, தனலட்சுமி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்,

“திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் தொடர வேண்டும் என்பதற்காக மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். தேர்தல் நேரத்திலும் கூட மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழர்களை தொடர்ந்து புறக்கணிக்கும் அரசியலுக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

மேலும், “பாஜக-அதிமுக கூட்டணி புதியது போல நடித்து வருகிறது. ஆனால் அவர்கள் முன்பே ஒன்றாக இருந்தவர்கள். கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தவர்கள் தான். தற்போது வெறுப்பு அரசியலை உருவாக்கி தமிழகத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

தொடர்ந்து, “திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் எங்கும் ஜாதி, மத கலவரம் ஏற்படாமல் அமைதியான ஆட்சி வழங்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் முடிவெடுத்து தமிழகத்தில் அறிவிப்பாளராக செயல்படுபவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் அனைவரும் உழைக்க வேண்டும்” என பேசினார்.