பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது முழுகவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்: எஸ்பி அறிவுறுத்தல்!

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது முழு கவனம் செலுத்தி அவர்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது முழுகவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்: எஸ்பி அறிவுறுத்தல்!

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது முழு கவனம் செலுத்தி அவர்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் நேற்று அங்குள்ள குளத்தருகே விளையாடச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்துள்ளனர். அவர்களின் மறைவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் சிறுவர், சிறுமியர் அருகில் உள்ள கடற்கரை, ஆற்றங்கரை, கண்மாய், குளம் போன்ற நீர் நிலைகளுக்கு குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ, நீச்சல் பயில்வதற்கோ ஆர்வத்துடன் இருப்பார்கள், அவ்வாறு அவர்கள் தனியாக செல்வதற்கு அனுமதிக்காதீர்கள். மேலும் சிறுவர்களிடம் இருசக்கர வாகனங்களை கொடுத்து அதை ஓட்ட அனுமதிப்பது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாகும், அதைப் பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இது தவிர சிறுவர், சிறுமியர்களை திருவிழாக்களுக்கு கூட்டிச் செல்லும்போது அங்குள்ள வண்ண மின் விளக்குகள் மற்றும் மின் சாதனப்பொருட்கள் அருகில் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போன்று விளையாடுவதற்கு சிறுவர், சிறுமியர் கைகளில் செல்போனை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் வீட்டின் மொட்டை மாடிகளுக்கு பெற்றோர்கள் இல்லாமல் தனியாகச் சென்று விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும்.  எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது முழு கவனம் செலுத்தி அவர்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்து பாதுகாப்புடன் செயல்படுமாறு அனைத்து பெற்றோர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.