தூத்துக்குடி முத்தையாபுரத்தில் அற்புதம் மருத்துவமனை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்!

தூத்துக்குடியில் அற்புதம் மருத்துவமனை சார்பில் வருகிற 29ஆம் தேதி சனிக்கிழமை தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்டு முத்தையாபுரம் பகுதி உள்ளது. இப்பகுதியில் குறிப்பாக முத்தையா புரம் வடக்கு தெரு, முனியசாமி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களில் மூன்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பொன் முருகன் என்பவரது மகன் பெரியசாமி (18) என்பவர் தனது வீட்டின் மாடியில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளைஞர்கள் மத்தியில் தொடரும் தற்கொலை எண்ணங்களை சரி செய்யும் வகையில் தனியார் மருத்துவமனை மற்றும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனை சார்பில், "எதற்கு எடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வது சரியான முடிவா? என்பதை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் வருகின்ற 29.03.2025 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு முத்தையாபுரம், கே.டி.கோசல்ராம் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு சாண்டி கல்விக்குழுமம் துணை சேர்மன் எஸ்பி சாண்டி தலைமை வகிக்கிறார். பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் மான்சிங், உடற்கல்வி ஆசிரியர் சத்திய சங்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றன. மன நல மருத்துவர் டாக்டர் சீனிவாசன் ஆலோசனை வழங்குகிறார். இதில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் எந்த வேலை இருந்தாலும் அன்று ஒரு நாள் மட்டும் ஒத்தி வைத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அற்புதம் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.