கழுகுமலையில் தரமற்ற குடிநீர் விற்பனை செய்த‌ டாஸ்மாக் பாருக்கு சீல் வைப்பு!

கழுகுமலையில் பயன்படுத்திய குடிநீர் பாட்டிலில், மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்த டாஸ்மாக் பாருக்கு உணவு பாதுகாப்பு துறையினர் மூடி சீல் வைத்தனர்.

கழுகுமலையில் தரமற்ற குடிநீர் விற்பனை செய்த‌ டாஸ்மாக் பாருக்கு சீல் வைப்பு!

கழுகுமலையில் பயன்படுத்திய குடிநீர் பாட்டிலில், மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்த டாஸ்மாக் பாருக்கு உணவு பாதுகாப்பு துறையினர் மூடி சீல் வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு, கழுகுமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே உள்ள மதுக்கூடங்களில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், கயத்தார் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) ஜோதிபாசு மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் கழுகுமலை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கழுகுமலை செந்தில் நகர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையுடன் இணைந்துள்ள திண்பண்டங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடத்தில் ஏற்கனவே பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களில், மீண்டும் குடிநீரை நிரப்பி, புதிய குடிநீர் பாட்டில்களாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அங்கு இருந்த சுமார் 117 லிட்டர் அளவிலான பயன்படுத்திய பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களும், 2 கிலோ மூடிகளும், பல காலியான பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து அந்த டாஸ்மாக் மதுபானக்கூடம், பொதுமக்களின் பொது சுகாதார நலன் கருதி உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டது. அதே போன்று, குட்டிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கூடத்துக்கும், காட்டு நாயக்கன் தெருவில் உள்ள மற்றொரு டாஸ்மாக் மதுக்கூடத்துக்கும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததால், அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத அல்லது காலாவதியான உரிமம் கொண்டுள்ள உணவு வணிகர்கள், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற பின்னரே, உணவு வணிகம் புரிய வேண்டும். 

எந்த உணவு வணிகராவது, உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவுத் தொழில் புரிவது ஆய்வின் போது கண்டறியப்பட்டால், நிறுவனம் அல்லது கடையை உடனடியாக மூடி சீல் வைக்கப்படும். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் பிரிவு 55, 58 மற்றும் 63-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டு உள்ள மதுக்கூடங்களில் பாதுகாப்பான உணவும், குடிநீரும் வழங்கப்பட வேண்டும், உணவு வழங்கும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.