தூத்துக்குடிக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்: பயணிகள் அவதி!
தூத்துக்குடிக்கு வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

தூத்துக்குடிக்கு வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கும், மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும் தினமும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், பெங்களூரு வழியாக மறுநாள் காலை 10.20 மணிக்கு மைசூர் ரயில் நிலையத்தை சென்றடைவது வழக்கம். கடந்த 11-ந் தேதி பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெற்ற காரணத்தால் தூத்துக்குடி- மைசூர் ரயில் 2 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக மைசூர் சென்றடைந்தது.
இந்நிலையில் மைசூர் - தூத்துக்குடி ரயில் நேற்று முன்தினம் வழக்கமான புறப்படும் நேரமான மாலை 6.20 மணிக்கு பதிலாக 3 மணி நேரம் காலதாமதமாக இரவு 9.30 மணிக்கு புறப்பட்டது. இதனால் அடுத்து வந்த அனைத்து ரயில் நிலையங்களிலும் 3 மணி நேரம் தாமதமாகவே வந்தடைந்தது. தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு காலை 10.55 மணிக்கு வந்து சேர வேண்டிய ரயில் தாமதமாக சுமார் மதியம் 1.30 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.