உப்பள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி – ஸ்டெர்லைட் ஆலை போல் சூழ்நிலை உருவாகும் என பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை..!

உப்பள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி – ஸ்டெர்லைட் ஆலை போல் சூழ்நிலை உருவாகும் என பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை..!

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு முதல் பழைய காயல் வரை சுமார் 3000 ஏக்கர் உப்பள நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

மத்திய – மாநில அரசுகள் இந்த திட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள், முத்தையாபுரம் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பெண்களிடம் நேரடியாக சந்தித்து, அவர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பெண்கள், “எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டும்”என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த்,

“நாங்கள் தற்போது ஆளும் கட்சியும் அல்ல, ஆண்ட கட்சியும் அல்ல. இருப்பினும், உங்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வோம். இதற்கு தீர்வு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்கும் முயற்சி தொடர்ந்தால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் போன்ற சூழ்நிலை உருவாகும்” என்று எச்சரித்தார்.

மேலும், “உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்களின் பிரச்சனையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்வேன்”என்றும் தெரிவித்தார்.

வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய அவர்,

“தேமுதிக கூட்டணியில் உள்ள கட்சி தான் அடுத்த ஆட்சியை அமைக்கும். அப்போது, தூத்துக்குடி உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவுடன் குரல் கொடுக்கும்”என்று கூறினார்.

மேலும்,

“சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியின் இறுதி வடிவம் தயாராகியுள்ளது. இன்னும் பத்து நாட்களில் சென்னையில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்”

என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.