திருச்செந்தூரில் 80 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது!!
திருச்செந்தூரில் 80 அடி தூரத்திற்கு திடீரென கடல் உள்வாங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 30 வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று (நவ.27) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தூத்துக்குடிமாவட்டத்தில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) திடீரென கடல் நீர் உள்வாங்க தொடங்கியது. பின்னர் சுமார் 80 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி பாறையில் நடந்து சென்று ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.