முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்!
முறப்பநாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
முறப்பநாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைப்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர் நெல்லையை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த 25-ந் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அங்கு கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் (40), அவரது உறவினரான மாரிமுத்து (32) ஆகியோர் வந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசுப்பிரமணியனை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்துவையும் போலீசார் கைது செய்தனர். அவர், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், மணல் கடத்தல் தொடர்பாக ராமசுப்பிரமணியன் குறித்து கடந்த 13-ந் தேதி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். இதனால் லூர்து பிரான்சிஸ் மீது எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.
சம்பவத்தன்று அவரை எதிர்பார்த்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருந்தோம். அவர் வந்ததும் அலுவலகத்திற்குள் சென்று மணல் கடத்தல் குறித்து புகார் கூறியது தொடர்பாக தட்டிக்கேட்டோம். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நாங்கள் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர். மேற்கண்டவாறு வாக்குமூலத்தில் மாரிமுத்து கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். சிறையில் அடைப்பு தொடர்ந்து அவர், ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு மகாராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.