விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் அதிரடி: அலட்சியம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை – உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் அதிரடி: அலட்சியம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை – உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆரம்பகட்ட விசாரணையில் அலட்சியம் காட்டிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி கடந்த மார்ச் 10-ஆம் தேதி மாயமான நிலையில் மறுநாள் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவி மாயமான அன்றே பெற்றோர் புகார் அளித்தும், போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை இனி விளாத்திகுளம் டிஎஸ்பி நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடம் பெறப்படும் வாக்குமூலங்களை வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளாக பதிவு செய்ய வேண்டும் என்றும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பெற்றோர் முதலில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யத் தவறிய சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்குரிய 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி உறவினர்களும் கிராம மக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வழக்கில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.