தூத்துக்குடியில் சர்வீஸ் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை..!

சர்வீஸ் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சி 3வது மைலில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வரக்கூடிய பிரதான சாலையாக சர்வீஸ் ரோடு அமைந்துள்ளது. பக்கிள் ஓடைக்கு அருகில் இருப்பதால் மக்கள் அதிகமாக பயன்படுத்தக் கூடிய சாலையாக இருக்கிறது.
இந்த சாலையை பள்ளி, கல்லூரி செல்லக்கூடிய மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் பயன்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டு பெய்த கனமழையால் இந்தப் பகுதியில் மழைநீரை வெளியேற்றுவதற்காக மூடியிருந்த கழிநீர் வாய்காலை திறந்து விட்டார்கள். அதன் பின்னர் 2 மாதம் ஆகியும் இன்று வரை சரி செய்யப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
சர்வீஸ் ரோடு இருப்பது தெரிந்தவர்கள் பிரச்சினை இல்லாமல் வருகிறார்கள். தெரியாதவா்கள் இந்த பாலத்தில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதால் உடனடியாக சர்வீஸ் சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.