தூத்துக்குடி: 6 பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை நோட்டாவுடன் சோத்து 29 ஆக உள்ளதால், 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது. எனவே, இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் வருமாறு: விளாத்திகுளம் தொகுதிக்கு 624 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 312 கட்டுப்பாட்டுக் கருவிகள், 338விவிபேட் இயந்திரங்கள். தூத்துக்குடி தொகுதிக்கு 686 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 343 கட்டுப்பாட்டுக் கருவிகள், 372 விவிபேட் இயந்திரங்கள். திருச்செந்தூா் தொகுதிக்கு 638 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 319 கட்டுப்பாட்டுக் கருவிகள், 345 விவிபேட் இயந்திரங்கள்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு 638 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 319 கட்டுப்பாட்டுக்கருவிகள், 345 விவிபேட் இயந்திரங்கள். ஓட்டப்பிடாரம்(தனி) தொகுதிக்கு 314 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 314 கட்டுப்பாட்டுக் கருவிகள், 340 விவிபேட் இயந்திரங்கள். கோவில்பட்டி தொகுதிக்கு 686 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 343 கட்டுப்பாட்டுக்கருவிகள், 371 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தத்தில் 3,900 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,950 கட்டுப்பாட்டுக் கருவிகள், 2,111 விவிபேட் இயந்திரங்கள் உள்ளன.
இவ்வியந்திரங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பறையிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில், திங்கள்கிழமை திறக்கப்பட்டது. பின்னா், இஎம்எஸ் 2.0 என்ற மொபைல் செயலி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, தகுந்த காவல் கண்காணிப்புடன் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட மூடப்பட்ட கண்டெய்னா் லாரி மூலம் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது. விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி தொகுதிகளுக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலும், திருச்செந்தூா், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் உள்ள பிரேத்யேக வைப்பறைகளில் 1பிரிவு காவல் கண்காணிப்புடன், 24மணி நேர சிசிடிவி கண்காணிப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக மாவட்ட தோதல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.