தூத்துக்குடி கொலை வழக்கு: இளஞ்சிறாருக்கு 3 ஆண்டு அரசு மருத்துவமனையில் சமூக சேவை தண்டனை – சிறார் நீதிக்குழுமம் நூதன தீர்ப்பு

தூத்துக்குடி கொலை வழக்கு: இளஞ்சிறாருக்கு 3 ஆண்டு அரசு மருத்துவமனையில் சமூக சேவை தண்டனை – சிறார் நீதிக்குழுமம் நூதன தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய இளஞ்சிறார் ஒருவருக்கு, மூன்று ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் சமூக சேவை செய்ய தூத்துக்குடி சிறார் நீதிக்குழுமம் நூதனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குருவார்பட்டியைச் சேர்ந்த மாயழகன் என்பவரது மகன்கள் முருகன் (26), கண்ணன் (27) மற்றும் மகள் சிந்தாமணி. சிந்தாமணி அதே ஊரைச் சேர்ந்த ஜேசுராஜின் மகன் ஜெயகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விவகாரத்தைத் தொடர்ந்து இரு குடும்பங்களுக்கும் இடையே நீண்டகால முன்விரோதம் இருந்து வந்தது.

28.05.2016 அன்று கண்ணன் வீட்டின் முன்பு முருகன், சந்தணமாரி, மாரியம்மாள் ஆகியோர் நின்றுகொண்டிருந்தபோது, ஜேசுராஜ், அவரது மகன் சதீஷ்குமார் (19) மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கடுமையாக மாறி தாக்குதல் நடைபெற்றது. பலத்த காயமடைந்த முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக சங்கரலிங்கபுரம் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது. மகிளா நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ஜேசுராஜ் மற்றும் சதீஷ்குமார் விடுவிக்கப்பட்டனர். இந்த விடுதலையை எதிர்த்து போலீசார் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், இளஞ்சிறார் மீதான விசாரணை தூத்துக்குடி மணி நகரில் உள்ள சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெற்றது. முதன்மை நடுவர் எஸ்.பாக்கியராஜ் மற்றும் உறுப்பினர் சரவணன் ஆகியோர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதித்தனர்.

அந்த தண்டனைக் காலத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சமூக சேவையாகக் கழிக்க உத்தரவிடப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் உதவி வழக்கறிஞர் முருகபெருமாள் ஆஜராகி வாதிட்டார்.