வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் அலைமோதல் – 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் அலைமோதல் – 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

வைகாசி மாதப் பிறப்பையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் அனைத்து கால பூஜைகளும் மற்றும் சிறப்பு வழிபாடுகளும் கோவிலில் சிறப்பாக நடைபெற்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்தனர். அதிகாலை முதலே கடலில் புனித நீராடிய பக்தர்கள், இலவச பொதுத் தரிசனம், ரூ.100 கட்டணத் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வரிசை உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாரம்பரிய முறையில் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களின் “அரோகரா” முழக்கத்தால் திருச்செந்தூர் பகுதி முழுவதும் ஆன்மீக பரவசம் நிலவியது.

மே 30-ஆம் தேதி வைகாசி விசாகம்

முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர தினமாகக் கருதப்படும் வைகாசி விசாகத் திருவிழா இந்த ஆண்டு மே 30-ஆம் தேதி மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வருகிற மே 21-ஆம் தேதி புகழ்பெற்ற வசந்த திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

திருவிழா நாட்களில் தினமும் பகல் நேரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் சண்முக விலாச மண்டபத்திற்குச் செல்வார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்று, பின்னர் மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

வைகாசி விசாகத் திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திருச்செந்தூர் நகரம் முழுவதும் தற்போது ஆன்மீகக் களைகட்டத் தொடங்கியுள்ளது. பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.