கோவில்பட்டி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதல்: 2 டிரைவர்கள் படுகாயம்!!

கோவில்பட்டி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதல்: 2 டிரைவர்கள் படுகாயம்!!

கோவில்பட்டி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய டிரைவர்களை  தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் சுடலைகனி (65). லாரி டிரைவரான இவர், இன்று மாலை நெல்லையில் இருந்து சரக்குகள் ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி அடுத்த சாலைபுதூர் விலக்கு அருகே செல்லும் போது திடீரென்று லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் ஏறி எதிரே சாத்தூரில் இருந்து நெல்லைக்கு சிமென்ட் லோடு ஏற்றி வந்த லாரியுடன் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்தில் இரு லாரிகளின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. லாரியை ஓட்டிச் சென்ற சுடலைகனி, சிமென்ட் லாரியை ஓட்டி வந்த கயத்தார் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை (37) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தராஜ் தலைமையில் வீரர்கள் வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இரண்டு லாரி டிரைவர்களையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.