தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு : 2 ரவுடிகள் உட்பட 4பேர் கைது!!
தூத்துக்குடியில் பொங்கல் விளையாட்டு விழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் உட்பட 4பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி, தாமஸ் நகரைச் சேர்ந்தவர் ஜான்சன் மகன் பிரதீப் குமார் (27), இவரது நண்பர் ஸ்டானிஸ் ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள கப்பல் மாதா சர்ச் அருகே நடந்து கொண்டிருந்த பொங்கல் விழா விளையாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 3 பைக்குகளில் வந்த 6பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் தகராறு செய்து பிரதீப் குமாரை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி சண்முகபுரம் வண்ணார் 3வது தெருவைச் சேர்ந்த சங்கர் மகன் விஜய் (எ) விஜயகுமார் (25), மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் தர்மராஜ் (27), தாமோதர நகரைச் சேர்ந்த ராமர் மகன் லிங்கதுரை (எ) அலாய் (23), லயன்ஸ் டவுன் 8வது தெருவைச் சேர்ந்த ஜெனி மகன் ஜேசார் (26) ஆகிய 4பேரை போலீசார் கைது செய்தனர். கைதான விஜய், தர்மராஜ் ஆகிய 2பேர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இவ்வழக்கில் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.