தவெக வேட்பாளர்கள் மிரண்டு போயுள்ளனர்...“சினிமாவில் ஹீரோ… நிஜத்தில் ஜீரோ!” – விஜயை கடுமையாக விமர்சித்த முன்னாள் மேலாளர் பிடி செல்வகுமார்..!

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜயின் முன்னாள் மேலாளரும், தற்போது திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமான பிடி செல்வகுமார், விஜயின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஒரே நபர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது சரியான நடைமுறை அல்ல . “ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டி வரும். இது மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் செயல். மேலும், இது ஆக்கபூர்வமான அரசியல் சிந்தனை அல்ல என்றும் குற்றம்சாட்டினார்.

கட்சியின் ஆரம்பத்தில் உழைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவோம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த வாக்குறுதி பின்பற்றப்படவில்லை. “நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெளிப்புற நபர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தவெக சார்பில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலையால் அச்சத்தில் உள்ளனர் , சிலர் தேர்தலுக்கு முன்பே விலகும் நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.

விஜயை குறித்து கடுமையாக விமர்சித்த அவர், “சினிமாவில் ஹீரோவாக இருக்கலாம், ஆனால் நிஜ அரசியலில் அது பொருந்தாது. நடிகர் என்ற புகழை வைத்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது” . இந்த தேர்தலில் உண்மை வெளிப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக குறித்து பேசிய அவர், அந்தக் கட்சியின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை பார்த்தே தாம் இணைந்ததாகவும், தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மரியாதையாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த பேட்டி, தேர்தலை முன்னிட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.