விளாத்திகுளம் சிறுமி வழக்கு: புகைப்படம், பெயர் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

விளாத்திகுளம் சிறுமி வழக்கு: புகைப்படம், பெயர் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து சில ஊடகங்களில் வெளியான தவறான தகவல்களுக்கு மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் 10ஆம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் சிறுமி காணவில்லை என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஒரு பிரபல தொலைக்காட்சி “விளாத்திகுளம் அருகே பாலியல் கொலை செய்து சிறுமியின் சடலம் துண்டு துண்டாக மீட்கப்பட்டது” என செய்தி வெளியிட்டது. இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுத்துள்ளது.

சம்பவ இடத்தில் சிறுமியின் உடல் முழுமையாக கண்டெடுக்கப்பட்டதாகவும், பாலியல் குற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் தடய அறிவியல் நிபுணர்களின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே உறுதி செய்யப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பவோ அல்லது பதிவிடவோ கூடாது என்றும் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.