சுர்ஜித் மொட்டை போட்டது ஏன்.. போனிலேயே இருக்கு பாருங்க.. ஜான் பாண்டியன் பேட்டி

நெல்லை கவினின் சொந்த ஊரான ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டின் முன்பு உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சுர்ஜித் மொட்டை போட்டது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பியதுடன், செல்போனிலேயே சில விஷயங்கள் இருக்கிறது என்றும் காட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர், தமிழ்செல்வி தம்பதியின் மகன் கவின் (வயது 27). இவர்கள் தற்போது தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் வசித்து வருகிறார்கள். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
இதில் சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், கிருஷ்ணகுமாரி நெல்லை மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இதற்கு முன் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். அப்போது, கவினும், சுர்ஜித்தின் அக்காளும் ஒரே பள்ளியில் படித்து வந்தபோது பழகியதாக கூறப்படுகிறது.
கவின்குமார் என்ஜினியர்
பட்டப்படிப்பு முடித்த கவின்குமார் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இதனால் கவின்குமார் அடிக்கடி ஏரலில் இருந்து மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு வந்து தனது காதலியை சந்தித்து பேசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
பெண் வீட்டார் எதிர்ப்பு
இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 27ம் தேதி கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தாத்தாவை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.
சுர்ஜித் ஆவேசம்
இதனை எப்படியோ அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித் அறிந்துகொண்டார். இதற்கிடையே சிகிச்சை முடிந்ததும் கவின்குமார் சொந்த ஊருக்கு செல்வதற்காக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த சுர்ஜித், கவின்குமாரை பேச அழைத்துள்ளார். பேசுவற்காக பைக்கில் சென்றுள்ளார்களாம். நடுவழியில் திடீரென அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுர்ஜித் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின்குமாரை சரமாரி வெட்டிவிட்டு தப்பிஓடினார்
.இதில் படுகாயம் அடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கவின் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது கவின்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது சுர்ஜித் என்பதை உறுதி செய்தனர்.அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கவினின் சொந்த ஊரான ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டின் முன்பு உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வீட்டின் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான கலந்து கொண்டதால் இங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்தால் தான் உடலை பெறுவோம் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். தாயார் இன்னும் கைது செய்யப்படவில்லை.
ஜான் பாண்டியன் பேட்டி
இந்நிலையில் நேற்று நெல்லை கவின் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகதலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, தம்பியுடைய இறப்பு நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 40 கிராமங்கள் ஒன்றாக சேர்ந்து நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கிறோம்.. இதுதான் உண்மை. எங்களுக்கு நீதி வேண்டும் என்பதற்காக நானும் அவர்களோடு சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன்.
எங்களுக்கு என்ன நீதி வேண்டும் என்றால், கொலை செய்தவனுடைய தாய், தந்தையர்கள் உடனோடு தான் இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அவங்க சொல்லி தான் அந்த பையன் கொலை செய்தான் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கிறோம். அமைச்சர்கள் வந்தார்கள், அதிகாரிகள் வந்தார்கள். அவர்களிடம் எங்களுடைய டிமாண்டை சொல்லியிருக்கிறோம். அவர்கள் பரிசீலனை செய்து வருவதாக கூறினார்கள்.. அதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் சுர்ஜித்தின் தந்தையை ரிமாண்ட் செய்ய வலியுறுத்தியுள்ளோம். எஸ்எஸ்டி வழக்கிலும், கொலை வழக்கிலும் அவர்கள் இருவரின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இது ஆணவ படுகொலை என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம். ஜாதி ரீதியான படுகொலை, இனிமேல் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது. அதற்கு இந்த வழக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அதனால் சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் டிமாண்ட்.. தாய், தந்தையர் சொல்லாமல் இப்படி செய்திருக்க வாய்ப்பு இல்லை.. அவனது வீடியோவை பார்த்திருக்கீங்களா.. அரிவாளுடன் தான் இருக்கிறார்கள். இது அவரது பெற்றோருக்கு தெரியாது என்று சொன்னால் என்ன அர்த்தம்.. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மொட்டை போட்டு வந்துள்ளார் சுர்ஜித். அதற்கு முன்னால் எப்படி இருக்கு என்று பாருங்கள் (போனில் காட்டுகிறார்). எனவே தான் பெற்றோரை கைது செய்யுமாறு டிமாண்ட் வைக்கிறோம்" இவ்வாறு கூறினார்.