பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி : தூத்துக்குடி அருகே பரிதாபம்!!

தூத்துக்குடி அருகே கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண் சாலையில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுரு. இவரது மனைவி காளீஸ்வரி (42). இவர்கள் இருவரும் நேற்று மாலையில் ஊரில் இருந்து ஏரலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மாலை 4 மணியளவில் சாயர்புரம் வழியாக சென்றனர். அப்போது சாயர்புரம் தூய ரபேல் மருத்துவமனை அருகே சாலை குண்டு குழியுமாக கிடந்துள்ளது.
அந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது, பின்னால் உட்கார்ந்திருந்த காளீஸ்வரி தவறி சாலையில் விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பதறிப்போன செல்வகுரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அக்கம் பக்கத்தினர் துணையுடன் மனைவியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் விரைந்து சென்று, இறந்த காளீஸ்வரி உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண், குண்டும் குழியுமான சாலையில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.