தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் தொடக்கம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை யில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ள பல்வேறு இடங்களை துணை ஆட்சியர் கெளரவ் குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை யில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ள பல்வேறு இடங்களை துணை ஆட்சியர் கெளரவ் குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் வாயிலாக, ஆலை மூடப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 14 வகையான அபாயகரமான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. சல்பூரிக் ஆசிட், பாஸ்போரிக் ஆசிட், பெட்ரோலிய வாயு,
ஹைஸ்பீட் டீசல், பர்னஸ் ஆயில், திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ நைட்ரஜன் உட்பட 14 வகையான வேதியியல் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளது.
தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகள் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளது. பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவர் துணை ஆட்சியர் கெளரவ் குமார் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக கூடுதல் இயக்குனர் சரவணன், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த் ஜோசன், தீயணைப்புத்துறை அதிகாரி ராஜ், தூத்துக்குடி நகராட்சி செயற் பொறியாளர் ரங்கநாதன், ஒட்டப்பிடாரம் பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி சரவணன் ஆகியோர் இன்று ஜூன் 21 ஆம் தேதி காலை ஆலையினுள் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி மற்றும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர்.