அரிவாளுடன் 'ரீல்ஸ்' வெளியிட்ட வாலிபர் கைது... 9 வழக்குகள் நிலுவையில் இருந்ததாக போலீஸ் தகவல்!

அரிவாளுடன் 'ரீல்ஸ்' வெளியிட்ட வாலிபர் கைது... 9 வழக்குகள் நிலுவையில் இருந்ததாக போலீஸ் தகவல்!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே, கையில் பெரிய அரிவாளுடன் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்' ஆக பதிவிட்ட 26 வயது வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சூர்யா (26), தற்போது ஆறுமுகநேரி பூவரசூரில் வசித்து வருகிறார். சூர்யா தனது கையில் பெரிய அரிவாளை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி, நாக்கை நீட்டியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ரென்னீஸ் தலைமையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சூர்யாவை போலீசார் கைது செய்து, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின்படி சூர்யா பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீசார் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, கைது செய்யப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், மேலும் பாளையங்கோட்டை மற்றும் நெல்லை காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.