தூத்துக்குடி தட்டார்மடம் அருகே காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவா் கொன்று புதைப்பு: 3 இளஞ்சிறார்கள் கைது!
தட்டாா்மடம் தேரிக்காட்டில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா், கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளையில் மாயமான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உடல் தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே கொன்று புதைப்பு. ஒரே பெண்ணை காதலித்த தகராறில் அவரை கொன்று புதைத்ததாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை செல்வமருதூர் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் தங்கத்துரை. இவருடைய மகன் ராஜேந்திரன் (வயது 20). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந்தேதி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜேந்திரனை தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விடுவித்து விட்டனர். அதன்பிறகு அவர் வேறொருவரிடம், ராஜேந்திரன் கொலை தொடர்பாக விசாரிக்க தான் என்னை போலீசார் அழைத்து இருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் அதற்கு இல்லை என்று கூறி இருக்கிறார். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் மற்றும் போலீசார் அந்த சிறுவனை மீண்டும் அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
அதன் விவரம்
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனும், 16 வயது சிறுவனும் ஒரே பெண்ணை காதலித்து உள்ளனர். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனை கொலை செய்ய சிறுவன் திட்டமிட்டார். அதன்படி அவர் 16 மற்றும் 14 வயதுடைய நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து ராஜேந்திரனிடம் நுங்கு வெட்டி சாப்பிடலாம் என்று கூறி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா அரசூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேரி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ராஜேந்திரனை அரிவாளால் வெட்டி கொலை செய்து உள்ளனர். பின்னர் அங்கு பனைமரம் அருகில் கிடந்த குழியில் அவரது உடலை போட்டு புதைத்து விட்டு சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 16 வயது சிறுவன் உள்பட 3 பேரையும் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ராஜேந்திரனை கொன்று புதைத்த இடத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் அந்த இடத்தை அடையாளம் காண்பித்தனர். அங்கு சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா முன்னிலையில் ராஜேந்திரன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கைதானவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலிடெக்னிக் மாணவர் மாயமான வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கி இருப்பதும், ஒரே பெண்ணை காதலித்த தகராறில் அவரை தீர்த்துக்கட்டி புதைத்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+++++++++++++++++++++++++++++++
தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் செய்திகள் முதல் உலகம் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News, Thoothukudi news,), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் டூட்டி விஷன் நியூஸ் (www.tutyvision.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Whatsapp Group: Click Here...