“இசை கேட்காத காதுகள்… தாளம் உணர்ந்த மனங்கள் – தூத்துக்குடி குட் ஷெப்பர்ட் பள்ளியில் செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மகிழ்ச்சி நடனம்”


தூத்துக்குடி:

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 3வது பகுதியில் செயல்பட்டு வரும், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியான குட் ஷெப்பர்ட் பள்ளியில், மாணவர்களின் திறமைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், ஜே சி ஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் அமைப்பின் சார்பில் இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பள்ளியில் 60க்கும் மேற்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களின் கற்றல் வளர்ச்சி, விழிப்புணர்வு மற்றும் மகிழ்ச்சியை மையமாகக் கொண்டு, இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

ஜே சி ஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் அமைப்பின் தலைவர் பாலசுபா, செயலாளர் S. சுருதி, முன்னாள் தலைவர் R. அஜிதா பிரபு மற்றும் அமைப்பு உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 100% செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு பேப்பர் ஸ்டார், பேப்பர் பைகள், பந்துகள், கீ செயின்கள், பேனா ஸ்டாண்ட் உள்ளிட்ட பயனுள்ள கைதொழில் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்களின் சுயதிறன், சுயநம்பிக்கை மற்றும் தொழில்முனைவு சிந்தனை வளர்க்கப்பட்டது.

மேலும், ஆங்கிலம் பேசுதல், Zumba Dance போன்ற செயல்பாடுகள் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பயிற்சிகளும் நடத்தப்பட்டன. அதேபோல், வழக்கறிஞர் சுபாஷினி அவர்கள் மூலம் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நடனப் பயிற்சியின் போது, பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஜே சி ஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடனமாடி மகிழ்ந்தனர். இசை கேட்க முடியாத குழந்தைகள் தாளத்தை உணர்ந்து வெளிப்படுத்திய மகிழ்ச்சி நடனம் அனைவரையும் நெகிழச் செய்தது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களது திறமைகளால் உருவாக்கிய கைவினைப் பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. நிகழ்ச்சி, மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியது. பேட்டியளித்த ஜே சி ஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் அமைப்பின் தலைவர் பாலசுபா,

“செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் திறமைகள் அற்புதமானவை. அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் சமூகத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக உயர்வார்கள்” என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி, தூத்துக்குடி சமூக சேவை வட்டாரங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.