கோவில்பட்டியில் 15-ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டி மே 21-ல் தொடக்கம் – இந்தியாவின் முன்னணி 16 அணிகள் பங்கேற்பு!

கோவில்பட்டியில் 15-ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டி மே 21-ல் தொடக்கம் – இந்தியாவின் முன்னணி 16 அணிகள் பங்கேற்பு!

கோவில்பட்டியில் நடைபெறும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 15-ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டித் தொடர் வரும் மே 21-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி 16 ஹாக்கி அணிகள் பங்கேற்க உள்ளதால், விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்களின் இயக்குநர் சண்முகவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், கே.ஆர். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து இந்த அகில இந்திய ஹாக்கி போட்டித் தொடரை நடத்துகின்றன. மே 21 முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி அணிகள் பங்கேற்கின்றன.

இந்தப் போட்டியில் நியூ டெல்லி இந்தியன் ஏர்ஃபோர்ஸ், மும்பை இந்தியன் நேவி, ஜலந்தர் ஆர்மி கிரீன், செகந்தராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே, நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா, ஜலந்தர் பஞ்சாப்-சிந்து வங்கி மற்றும் கோவில்பட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி உள்ளிட்ட 16 முன்னணி ஹாக்கி அணிகள் பங்கேற்கின்றன.

தொடக்க விழா மற்றும் போட்டி அட்டவணை

மே 21-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின்றன. காலிறுதிக்கு முந்தைய போட்டிகள் லீக் முறையிலும், கால் இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாக்-அவுட் முறையிலும் நடைபெற உள்ளன.

தினமும் 4 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகள் காலை 7 மணி, மாலை 5.15 மணி, 6.45 மணி மற்றும் இரவு 8.15 மணி ஆகிய நேரங்களில் மின்விளக்கு வசதியுடன் நடைபெறும்.

ரூ.2 லட்சம் முதல் பரிசு

இப்போட்டிகளை தேசிய மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த நடுவர்கள் நடுநிலையுடன் நடத்த உள்ளனர். தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும், லட்சுமி அம்மாள் நினைவு கோப்பையும் வழங்கப்படும்.

இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.1 லட்சம் மற்றும் சுழற்கோப்பை, மூன்றாம் இடத்திற்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, நான்காம் இடத்திற்கு நினைவு கோப்பை வழங்கப்பட உள்ளது.

மேலும் சிறந்த கோல்கீப்பர், சிறந்த தற்காப்பு வீரர், சிறந்த நடுகள வீரர், சிறந்த முன்வரிசை வீரர், சிறந்த வளர்ந்து வரும் வீரர் மற்றும் தொடரின் சிறந்த ஆட்டநாயகன் ஆகியோருக்கும் தனித்தனி சிறப்பு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

பொதுமக்களுக்கு இலவச அனுமதி

வெளிமாநிலங்களில் இருந்து வரும் வீரர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் கட்டணமின்றி இந்த அகில இந்திய ஹாக்கி போட்டிகளை நேரில் வந்து கண்டு ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.