முன்ஜாமீன் தள்ளுபடி... சில நிமிடங்களில் அதிரடி கைது! முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது – ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

முன்ஜாமீன் தள்ளுபடி... சில நிமிடங்களில் அதிரடி கைது! முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது – ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சில நிமிடங்களிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஜூன் 20-ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும் அவதூறாகவும் கருத்து தெரிவித்ததாகக் கூறி, நகரச் செயலாளர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஆத்தூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வழக்கில் கைதாவதைத் தவிர்க்க அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், "7 முறை எம்எல்ஏ-வாக இருந்த ஒருவர் பொதுவெளியில் இப்படிப் பேசலாமா?" என்று கேள்வி எழுப்பி கடுமையான கண்டனத்தை பதிவு செய்ததுடன், முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ ஆய்வில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை, ஆத்தூர் காவல்துறையினர் அங்கு சென்று முறைப்படி கைது செய்து காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

கைது நடவடிக்கையின் போது, தாம் வந்த சொந்த வாகனத்தில் செல்ல அனுமதிக்குமாறு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு காவல்துறையினர் அதற்கு அனுமதி வழங்காமல், காவல்துறை வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்தூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.