தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 200 பேர் கைது..!

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 200 பேர் கைது..!

தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கப்படும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை  தமிழக முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் சிதம்பர நகரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அனுமதி இன்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார்  200க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். 

தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த சம்பவத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். 

இப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம் தலைமை வகித்தார் மாவட்ட துணைத் தலைவர்கள் ஆனந்த செல்வம், பெருமாள், இணைச் செயலாளர்கள் பாஸ்கர், விஜயராணி தணிக்கையாளர்கள் வசிஷ்டர் தர்மலிங்கம், இந்திரா மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் மு தமிழரசன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார் மாவட்ட செயலாளர் செல்லதுரை கோரிக்கைகளை விளக்கி பேசினார்.