“டெண்டர் யாருக்கு? கட்டுப்பாடு யாரிடம்? 90 ஆண்டுகள் பழமையான தூத்துக்குடி வணிக வளாகம் குறித்து எழும் கேள்விகள்”

தூத்துக்குடி மாநகராட்சி 25-வது வார்டில் உள்ள 90 ஆண்டுகள் பழமையான வணிக வளாகம் சேதமடைந்து பூட்டியே கிடப்பது ஏன்? மக்கள் எழுப்பும் கேள்விகள்.

“டெண்டர் யாருக்கு? கட்டுப்பாடு யாரிடம்? 90 ஆண்டுகள் பழமையான தூத்துக்குடி வணிக வளாகம் குறித்து எழும் கேள்விகள்”

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் 25-வது வார்டுக்குட்பட்ட மட்டக்கடை கோபால் சாமி தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான 90 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. “நகராட்சி சந்தை” என அழைக்கப்பட்டு வந்த இந்த வணிக வளாகத்தில், ஒருகாலத்தில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் சேர்த்து 20-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன.

தற்போது, இந்த கட்டிடம் பல இடங்களில் சேதமடைந்து, பல ஆண்டுகளாக எந்தவித புதுப்பிப்பும் செய்யப்படாமல் பயன்பாடற்ற நிலையில் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் குடியிருப்போர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த வணிக வளாகத்தின் வெளிப்புறத்தில் மளிகை, காய்கறி, ஜவுளி, தேநீர் கடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. ஆனால், உட்புறத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகள் தனிப்பட்ட ஒருவரால் டெண்டர் எடுக்கப்பட்டு, அவரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாநகரில் பல பழமையான வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்த முக்கியமான வணிக வளாகம் மட்டும் புதுப்பிக்கப்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த வணிக வளாகம் புதுப்பிக்கப்பட்டால், அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள். தற்போது அப்பகுதி மக்கள், சந்தன மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள ரேஷன் கடைக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த வணிக வளாகத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், வணிக வளாகத்தை புதுப்பிக்க வேண்டும் என பல அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் மாநகராட்சி ஆணையராக இருந்த மதுபாலன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, வணிக வளாகத்தை புதுப்பிக்க முயற்சி எடுத்ததாக கூறப்பட்டாலும், அது நடைமுறைக்கு வராததால் வியாபாரிகளும் பொதுமக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மேலும், 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் முடிவடைந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் முன்னாள் டெண்டர் எடுத்தவர்களுக்கே டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், வணிக வளாகத்தை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படாதது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், வணிக வளாகத்தைச் சுற்றியுள்ள கடைகளில் “மாநகராட்சி மட்டக்கடை” என்ற பெயரில் தினசரி பில் வழங்கி வசூல் நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அதற்கேற்ற அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என்பதால் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆகவே, இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், மாநகராட்சி ஆணையரும் தலையிட்டு, வணிக வளாகத்தின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.