தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் – தீவிர சோதனைக்கு பின் புரளி என உறுதி

தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் – தீவிர சோதனைக்கு பின் புரளி என உறுதி

தூத்துக்குடி: தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் 12 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளிகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது அதிகரித்துள்ள நிலையில், இன்று முற்பகல் தூத்துக்குடி நீதிமன்றத்துக்கும் மிரட்டல் மின்னஞ்சல் வந்தது.

மதியம் 12:20 மணியளவில் 12 வெவ்வேறு இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தகவலறிந்த காவல்துறையினர், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையுடன் நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

நீதிமன்றப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீண்ட நேர சோதனைக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.