தூத்துக்குடி மாவட்டத்தில் நம்பர் பிளேட் இல்லாத 284 பைக்குகள் பறிமுதல்: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினரின் வாகன சோதனையில், நம்பர் பிளேட் பொருத்தப்படாத 284 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், போலீசார் வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கடந்த சனி, ஞாயிறு (பிப். 22, 23) ஆகிய 2 நாள்கள் மேற்கொண்ட வாகன சோதனையில், எண் பலகை இல்லாத 284 பைக்குகளைக் கண்டறிந்து, வழக்குப் பதிந்து பறிமுதல் செய்தனர்.
265 பைக்குகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் எண் பலகை மாட்டியதால், அவை விடுவிக்கப்பட்டன. சாலை விதிகளை மீறுவோர், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.