தூத்துக்குடி : புதுக்கோட்டை அருகே மண்வெட்டியால் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சாவு: கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை!

தூத்துக்குடி அருகே குடும்ப பிரச்னையில் மண் வெட்டியால் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சிசிச்சை பலனின்றி இறந்தார், இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம்,புதுக்கோட்டையை அடுத்த மேலக்கூட்டுடன் காடு, நடுத் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (41). ரயில்வேயில் 'கேங்மெனாக' வேலை பார்த்து வந்தார். இவர் அதே ஊர் மேலத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் (23) என்பவரின் அக்காள் மகராசியை திருமணம் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடிபோதையில் ரமேஷ் வீட்டுக்கு சென்று அவரது தாய் ஆறுமுகத்தம்மாளை அவதூறாக பேசினார். இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், வேல்முருகனை அங்கு கிடந்த மண்வெட்டியை எடுத்து அதன் கணையால் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் இறந்தார். இதையடுத்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ மாணிக்கராஜா ஆகியோர் ஏற்கனவே பேரூரணி சிறையில் அடைக்கப்பட்ட மைத்துனர் ரமேஷ் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணைந நடத்தி வருகின்றனர்.