விபத்து மரண வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!!

விபத்து மரண வழக்கில் குற்றவாளிக்கு 7 வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் இடைச்சிவிளை பகுதியைச் சேர்ந்த ஆதிலிங்கம் மகன் சிவமுருகன் (31/2025) என்பவர் கடந்த 06.11.2018 அன்று குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டங்காடு பகுதியில் மதுபோதையில் அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் காரை இயக்கி, அங்கு வந்து கொண்டிருந்த உடன்குடியைச் சேர்ந்த சிவசுப்பு மகன் காங்கேயன் (54/2018), படுக்கப்பத்து நடுத்தெருவை சேர்ந்த சிவராமசேகர் மகன் தங்கதுரை (45/2025) மற்றும் ஒரு சிறுவனை இடித்து மோதியதில் காங்கேயன் சம்பவ இடத்தில் உயிரழந்தும் மற்ற இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் விபத்து மரணம் வழக்கு பதிவு செய்து சிவமுருகனை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா இன்று (09.09.2025) குற்றவாளியான சிவமுருகனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ராதிகா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானபிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் முருகன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.