ஈரான் போரால் கப்பலில் சிக்கிய தூத்துக்குடி இளைஞர்: மகனை மீட்க கலெக்டரிடம் தாய் மனு

ஈரான் போரால் கப்பலில் சிக்கிய தூத்துக்குடி இளைஞர்: மகனை மீட்க கலெக்டரிடம் தாய் மனு

ஈரானில் போர் சூழ்நிலை காரணமாக கப்பலில் சிக்கியுள்ள தனது மகனை பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் தாய் ஒருவர் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி திரேஷ்புரம்  பகுதியைச் சேர்ந்த ஞானம் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியதாவது:

தனது மகன் கப்பலில் வேலை செய்வதற்காக ஈரான் கடல் பகுதிக்கு சென்றுள்ளார். வழக்கமாக 9 மாதங்களில் பணியை முடித்து வீடு திரும்ப வேண்டிய நிலையில் தற்போது 10 மாதமாகியும் அவர் திரும்பவில்லை.

இந்நிலையில் ஈரான் பகுதியில் போர் சூழ்நிலை ஏற்பட்டதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கப்பலில் இருந்து இறக்கப்பட்ட பிறகு அவர்களுக்கு விமான டிக்கெட் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததாகவும், ஆனால் அதற்குள் போர் சூழ்நிலை ஏற்பட்டதால் விமானங்கள் இயக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

போர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு தான் மகன் கடைசியாக தொடர்பு கொண்டதாகவும், அதன் பிறகு நேரடியாக எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார். சில நாட்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் எழுத்து மூலம் “நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்” என்ற தகவல் வந்ததாகவும், ஆனால் அது தனது மகன் அனுப்பியதா என்பது கூட தெரியவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

இதையடுத்து தனது மகனை பாதுகாப்பாக மீட்டு வர தமிழக அரசு மற்றும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.