தூத்துக்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை..!

தூத்துக்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை..!

தூத்துக்குடியில் மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். 

நெல்லை பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர் மகன் முத்துராஜ் (50). கூலி தொழிலாளி. குடும்பத்தை விட்டு பிரிந்து தூத்துக்குடிக்கு வந்த இவர்,  பேப்பர் அட்டைகளை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார். இரவு நேரத்தில் பாளையரோடு இசக்கி அம்மன் கோவில் அருகில் உள்ள மையவாடியில் தூங்குவார். 

இந்நிலையில் நேற்று மாலை  முத்துராஜ், தன்னுடன் குப்பை சேகரிக்கும் சிவகாசியைச் சேர்ந்த தங்க மாரியப்பன் என்பவருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். பின்னர் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் வைத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தங்க மாரியப்பன், முத்துராஜை அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

இதில் பலத்த காயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று முத்துராஜ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்கு பதிவு செய்து தங்கம் மாரியப்பனை தேடி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.