விளாத்திகுளம் அருகே உடல் காயங்களுடன் மூதாட்டி சடலமாக மீட்பு : போலீஸ் விசாரணை..!
விளாத்திகுளம் அருகே மூதாட்டி உடல் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் துரைசிங்கம் மனைவி பேச்சியம்மாள் (70), இந்த தம்பதிகளுக்கு 4மகன்களும்2 மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள் இந்த நிலையில் பேச்சியம்மாள் கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள காட்டுப் பகுதியில் உள்ள ஊரணியில் ஒரு பெண் சடலம் மிதப்பதாக காடல்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர்.
விசாரணையில் அவர் காணாமல் போன பேச்சியம்மாள் என்று தெரியவந்தது. உடனடியாக அவர்களது குடும்பத்தினரை அழைத்து வந்து உறுதி செய்தனர். பின்னர் உடலை பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேச்சியம்மாள் கை கால்கள் சேலையால் கட்டப்பட்டு, உடலில் பாரங்கல் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அவரை நகைக்காக யாராவது கொலை செய்து ஊரணியில் போட்டுவிட்டு சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.