பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை!
பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி வடகால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி வடகால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில்:
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தில் உள்ள பேய்குளம், குலையன்கரிசல், பொட்டல்குளம், ஆறுமுகம் மங்கலம், பொற்கை உள்ளிட்ட குளங்களில் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தண்ணீர் இல்லாத காரணத்தால் அந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாழைகள் பயிர்கள் கருகி வரும் நிலையில் உள்ளது. மேலும் ஆடு மாடுகளுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறது. கடந்தாண்டு குறைவான அளவில் மழை பெய்த காரணத்தினால் அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்தது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் தாங்கள் தலையீடு செய்து கருகி வரும் நிலையில் உள்ள வாழைகளை பாதுகாக்கவும், குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஆடு மாடுகளை காப்பாற்றும் வகையில் பாபநாசம் அணையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொருளாளர் நம்பி ராஜன், மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், சேர்வைக்காரன்மடம் விவசாயிகள் சங்க தலைவர் பொன்ராஜ், உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.