தூத்துக்குடியில் காங்கிரஸ் வார்டு தலைவரை வெட்ட முயற்சி! அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் 2 பேர் கைது!

தூத்துக்குடியில் காங்கிரஸ் வார்டு தலைவரை வெட்ட முயற்சி!   அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் 2 பேர் கைது!

தூத்துக்குடியில் காங்கிரஸ் வார்டு தலைவரைக் கொலை செய்ய முயன்று, அவரது ஆட்டோவைச் சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அண்ணா நகர் பகுதியில் அண்மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அனிதா ராதாகிருஷ்ணனின் உருவப் படத்தை காங்கிரஸ் தொண்டர்கள் தீயிட்டுக் கொளுத்தி எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களான முனியசாமிபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் குப்பை (எ) இசக்கி ராஜா (26) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய இருவரும் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் தூத்துக்குடி அமுதா நகர் 4-வது தெருவில் வசித்து வரும் 50-வது வார்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமராஜ் (59) என்பவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். "எங்கள் அண்ணாச்சியை எதிர்த்தா போராட்டம் நடத்துகிறீர்கள்?" என்று கூச்சலிட்டவாறு, காமராஜை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய காமராஜ், அலறியடித்தபடி வீட்டிற்குள் ஓடிச் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காமராஜின் வாழ்வாதாரமான ஆட்டோவின் தார்ப்பாய் மற்றும் சீட் கவர்களைக் கத்தியால் கிழித்து, அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியது. இதில் சுமார் ரூ20,000 மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்துக் காமராஜ் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், பொறுப்பு ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் உடனடியாகக் கொலை முயற்சி மற்றும் சொத்துச் சேதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான குப்பை (எ) இசக்கி ராஜா மற்றும் இளஞ்சிறார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விரைந்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கண்டனம்:

இக்கொலை முயற்சிச் சம்பவம் குறித்துத் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ். எம். சகாயராஜ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "எங்கள் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்துப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து நாங்கள் ஜனநாயக முறைப்படி அரசியல் ரீதியாகவே போராட்டம் நடத்தினோம்.

ஆனால், இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தனது ஏவல் படைகளை ஏவி, வார்டு காங்கிரஸ் தலைவர் காமராஜைக் கொலை செய்ய முயன்றதையும், அவரது ஆட்டோவைச் சேதப்படுத்தியதையும் காங்கிரஸ் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது. அரசியலை அரசியலாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும்; இது போன்ற வன்முறைகள் தொடருமானால் காங்கிரஸ் தொண்டர்களும் தகுந்த பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டார்கள்." என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.