தூத்துக்குடியில் ATM உடைத்து கொள்ளை முயற்சி – இளைஞர் கைது, 15 லட்சம் பணம் பாதுகாப்பில்

தூத்துக்குடியில் ATM உடைத்து கொள்ளை முயற்சி – இளைஞர் கைது, 15 லட்சம் பணம் பாதுகாப்பில்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள தேவர்புரம் சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ATM-இல் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் துரிதமாக கைது செய்துள்ளனர்.

இன்று (27.04.2026) அதிகாலை சுமார் 1.30 மணியளவில், ஒரு இளைஞர் சைக்கிளில் வந்து வங்கி அருகே நிறுத்திவிட்டு ATM மையத்துக்குள் நுழைந்தார். பின்னர் ஸ்க்ரூ டிரைவரைப் பயன்படுத்தி ATM இயந்திரத்தின் வெளிப்புற கதவை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளார்.

இந்த செயல்பாட்டின்போது, ATM-இல் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அலாரம் வங்கி சர்வர் மூலம் செயல்பட்டு, வங்கி மேலாளருக்கு எச்சரிக்கை சென்றது. உடனடியாக வங்கி மேலாளர் தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ATM உள்ளே இருந்த இளைஞரை நேரிலேயே பிடித்து தென்பாகம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி கணேசன் காலனி 2வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மாரி செல்வம் (22) என்பது தெரியவந்தது.

மேலும், இவருடன் வேறு யாராவது தொடர்புடையவர்களா என்பதை அறிய போலீசார் ATM மையத்தின் CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இவர் ஒருவரே சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக, அந்த ATM இயந்திரத்தில் ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான பணம் இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் விரைந்து செயல்பட்டதால், எந்தப் பண இழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக, வங்கி மேலாளர் பிரபு (35), ராஜிவ்நகர் 1வது தெரு, தூத்துக்குடி என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாரி செல்வத்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.