தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல்: அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல்: அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல்: அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

தூத்துக்குடியில் வருகிற 3ஆம் தேதி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞரின் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட உள்ளது.

இது குறித்து திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை: முத்துவேலர் அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் தன்னுடைய 14 – வயதில் "ஓடி வந்த இந்திப் பெண்ணே நில்” நீ தேடி வந்த கோழை நாடு இதுவல்ல, திரும்பிச் செல் என்று திருவாரூர் வீதியில் தமிழ்க்கொடி ஏந்தி தன்னுடைய பொது வாழ்க்கையை துவக்கி தன்னுடைய வாழ்நாளில் 80 ஆண்டு காலம் பொதுவாழ்விற்கு அர்ப்பணித்த ஒப்பற்ற தலைவர்.

தமிழ், தமிழர் நலன், தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூகநீதி, சமத்துவமே வாழ்நாள் செயல் திட்டமாக கொண்ட ஓய்வறியாச் சூரியன். 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்து நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த திராவிட இயக்கத்தின் சிற்பி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர்.இந்திய அரசியலில் நெருக்கடிகள் ஏற்படும் பொழுதெல்லாம் தன்னுடைய திறமையால் தீர்வுகண்டவர் பல்வேறு ஜனாதிபதிகளையும், பிரதமர்களையும் உருவாக்கிய பிதாமகன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூறாவது பிறந்தநாள் ஜீன் - 3 அன்று வருகிறது.

அவரது 100 – வது பிறந்த நாளை நூற்றாண்டு விழாவாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற கழகத்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முழுவதும் ஏழை – எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், விளையாட்டு போட்டிகள், பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் என இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.

ஜீன் – 3 அன்று காலை 8.00 மணி அளவில் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தின் முன்பு உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளராகிய (P.கீதாஜீவன்) என்னுடைய தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது.

தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் பழைய பேரூந்து நிலையம் முன்பு சர்க்கரை பொங்கல் வழங்கும் நிகழ்ச்சியும், காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி,மு.க. சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட இருக்கிறது. மதியம் 12.00 மணி அளவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் மாநகரிலுள்ள முதியோர் இல்லங்கள், மாற்று திறனாளி இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட இருக்கிறது.

மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு கழகங்கள் தோறும் முத்தமிழறிஞா் கலைஞா் அவர்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், பழைய கொடிகம்பங்களில் உள்ள கழகத்தின் இருவண்ணக் கொடியை மாற்றி புதிய கொடிகள் ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் கழகத்தின் கொள்கை விளக்கப் பாடல்கள் ஒலிபரப்பியும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. எனவே கழக நிர்வாகிகள் தொண்டா்கள் அனைவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.