தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக உடல் உறுப்பு தானம்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி அழகேச புரம், சுந்தரவேல் புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஆர்.சந்தனராஜ் இன்று காலமானார். அன்னாரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர்கள் முன்வந்தனர். அதன்படி அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் உடல் உறுப்புகள் தானம் செய்த சந்தனராஜ் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் இளம்பகவர், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டம் தமிழ்நாட்டில் 2008-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்து பலரின் உயிர் காக்க முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு உறுப்பு தானம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இதுவே முதல் உடல் உறுப்பு தானம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக உறுப்பு தானத்திற்காக மூளைச்சாவு அடைந்த நோயாளியிடம் இருந்து உறுப்புகள் ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகள் மூலம் எடுக்கப்பட்டு உள்ளது.
மருத்துவமனை முதல்வரின் தலைமையில் மயக்கவியல் துறை தொடர் கண்காணிப்பில் அவசர சிகிச்சை துறை, மூளை நரம்பியல் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, அறுவை சிகிச்சை துறை சிறுநீரகவியல் துறை மருத்துவம் மற்றும் அதை சார்ந்த துறைகள் அறுவை சிகிச்சை மற்றும் அதன் சார்ந்த துறைகள் சார்ந்த மருத்துவர்கள் மூலம் மூளைச்சாவு அடைந்த நோயாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் துணை கண்காணிப்பாளர் உறைவிட மருத்துவர், சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர்கள் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் அனைத்து மருத்துவ பணியாளர்கள் உறுதுணையாக இருந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.