தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு.. நிதி நிறுத்தப்படும் அபாயம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நில உடைமைகளை பதிவேற்றம் செய்யாத மற்றும் தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பிஎம்கிசான் திட்டத்தில் அடுத்த தவணை நிதி நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.
விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பிஎம்கிசான் கௌரவ நிதி உதவித் தொகை, சொட்டுநீர் பாசனக்கருவிகள், வேளாண் உபகரணங்கள், வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்களிப்புடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசு வழங்கும் பிஎம்கிசான் கௌரவ நிதி உதவித்தொகை விவசாயகள் அல்லாதவருக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக இணைய வழியில் பிஎம்கிசான் கௌரவ நிதி உதவித் தொகையானது விவசாயிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. நில உடைமைகளை பதிவேற்றம் செய்யாத மற்றும் தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பிஎம்கிசான் திட்டத்தில் அடுத்த கட்ட தவணை நிதி நிறுத்தப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில், பிஎம்கிசான் கௌரவ நிதி உதவித் தொகை பெறும் 48,726 விவசாயிகளில், 23956 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள அட்டை எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.
மீதமுள்ள 24,770 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா அல்லது கூட்டு பட்டா, ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுடன், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த கள அலுவலர்கள் மற்றும் மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஆகிய துறை சார்ந்த பணியாளர்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை எண் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பொது சேவை மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை - உழவர்நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி உடனடியாக இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.