தூத்துக்குடியில் போலி ஐபோன் உதிரிபாகங்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி சோதனை!

தூத்துக்குடியில் போலி ஐபோன் உதிரிபாகங்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி சோதனை!

தூத்துக்குடியில் செல்போன் கடைகளில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி சுமார் ரூ.1லட்சம் மதிப்பிலான ஆப்பிள் போன் போலி உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனர் 

ஆப்பிள் போன் (iPhone)  உதிரி பாகங்கள், மற்றும் தயாரிப்புகள் ஆப்பிள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட  கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில், ஆப்பிள் போன் போலி உதிரிபாகங்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஆய்வாளர் பியூலா தலைமையிலான போலீசார் தூத்துக்குடி தெற்கு புது தெரு பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் காப்புரிமை சட்டத்திற்கு முரணாக ஆப்பிள் போன்கள், உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? போலி உதிரி பாகங்களை பயன்படுத்தி பழுதுபார்க்கப்படுகிறதா?  என்று அதிரடி சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் 4 கடைகளில் இருந்த சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான போலி ஆப்பிள் போன் உதிரி பாகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேருக்கு கைது அறிக்கையை சமர்ப்பித்தனர். ஓரிரு தினங்களில் இவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது