தூத்துக்குடி மொட்டை கோபுரம் கடலில் குளித்த 3 சிறுவர்கள் அலைகளில் சிக்கி பரிதாப பலி முதல்வர் நிவாரணம் வழங்கல்

தூத்துக்குடி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் எதிர்பாராத விதமாக ராட்சத அலைகளில் சிக்கி கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள கீதா ஜீவன் நகரைச் சேர்ந்த கதிரேசன் மகன் முகேந்திரன் (12) — மாநகராட்சி பள்ளியில் 7ஆம் வகுப்பு, அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீ கார்த்திக் (13) — 8ஆம் வகுப்பு, வனராஜ் மகன் திருமணி (14) — தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கபடி விளையாடச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, நண்பர்களுடன் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ராட்சத அலை 4 சிறுவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதில் ஒருவரை அங்கிருந்த மீனவர் ஒருவர் சிறிய படகின் உதவியுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். ஆனால் மற்ற மூன்று சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாளமுத்து நகர் போலீசார் மற்றும் தருவைகுளம் கடலோர பாதுகாப்புக் குழும போலீசார், மீனவர்களின் உதவியுடன் மூன்று சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்பேரில், மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா ஆகியோர் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் பிரபு, வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.