துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா : அமைச்சர் பி. கீதாஜீவன் அறிக்கை

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா : அமைச்சர் பி. கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாவட்டச் செயலாளர் பி. கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை : தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான இளந்தலைவர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினமான நவ - 27-ல் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக் கழகங்கள் தோறும் கழகத்தின், இரு வண்ணக் கொடிகளை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், கழக கொள்கை விளக்கப் பாடல்களை ஒலிப்பரப்பியும், மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள் நடத்தியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

மேலும் அன்றைய தினம் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளி இல்லங்கள், அனைத்திலும் உள்ள ஏழை-எளியோருக்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. 27.11.2024 அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்டபட்ட அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாநகர தி.மு.க. இளைஞரணி சார்பில் தூத்துக்குடியில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான உபகரணங்கள், பள்ளி மாணவ- மாணவியருக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட இருக்கிறது. தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே பிரம்மாண்ட கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது போல மாணவரணி சார்பில் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட் - புக் உள்ளிட்ட தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. 

விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாவட்ட அளவில் கைப்பந்து போட்டியும், அதுபோல மற்ற கழக சார்பு அணிகளின் சார்பில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 30.11.2024 அன்று இரத்ததான முகாம் மற்றும் நலிவடைந்தோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 7.12.2024 அன்று மாபெரும் பல்மருத்துவம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இளந்தலைவர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியிலுள்ள கழக மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளை கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், சிறப்பாக செய்திடவும் கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.