குழந்தையைத் தத்தெடுக்க உதவிய கனிமொழி கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி தம்பதி*
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி உதவியின் மூலம் குழந்தை ஒன்றை தத்தெடுத்த மாற்றுத்திறனாளி தம்பதி, இன்று (03/08/2024) தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில் கனிமொழி கருணாநிதியிடம் தங்களது குழந்தையை காண்பித்து நன்றி கூறி மகிழ்ந்தனர். மேலும், அந்த தம்பதியினருக்குக் கனிமொழி எம்.பி வாழ்த்து கூறி உதவித் தொகையை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த எஸ்.வேல்மயில் (34) மற்றும் பி. பேபி (36) ஆகிய மாற்றுத்திறனாளிகள் 2016-ல் திருமணம் செய்துள்ளனர். வேல்மயில் பெட்ரோல் பங்க் நிலையத்தில் வேலை செய்கிறார் மற்றும் பேபி ஒரு மதிய உணவு மையத்தில் அமைப்பாளராக உள்ளார். இவர்கள் தற்போது வேல்மயிலின் பெற்றோருடன் தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் முடிவு எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு வளர்ச்சி மையத்தில் 2020-ல் குழந்தையைத் தத்தெடுக்கப் பதிவு செய்தனர். பதிவிற்குப் பின்பு, ஒரு சமூகப்பணியாளர் அவர்களின் இல்லத்திற்குச் சென்று Home Study (குழந்தை வளர்ப்பதற்கான) பரிசோதனை செய்து குழந்தை வளர்ப்பதற்குத் தகுதி உடையவர்கள் என சான்றிதழ் அளித்துள்ளார்.
2024-ல் எதிர்பார்ப்பு பட்டியலில் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த பின்னர், அவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் தங்கள் விண்ணப்பத்தைப் புதுப்பித்தனர். புதுப்பித்தல் முடிந்ததும் மேலும் ஒரு வீட்டுப்பார்வை மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் தத்தெடுப்பிற்கு பதிவு செய்து மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். புதுப்பிப்பு செயல்முறையின் போதும் அதே செயல்முறையை மேற்கொண்டனர். அதிகாரிகளும், மத்திய தத்தெடுப்பு ஆதார ஆணையத்தின் (CARA) எந்த தகவலும், அவர்களின் உடல்நிலை குழந்தையைத் தத்தெடுக்க ஒரு தடையாக இருக்கும் என்று குறிப்பிடவில்லை.
அவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் பிறந்த ஒரு குழந்தையைத் தத்தெடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஜூன் 12ஆம் தேதி CARA-விலிருந்து கைபேசிக்கு குறும்செய்தி மற்றும் மின்னஞ்சல் பெற்றனர். குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகிறீர்களா என்பதை 48 மணிநேரத்தில் உறுதிப்படுத்துமாறு கேட்டனர், அவர்கள் உறுதிப்படுத்தினர். அதன்பிறகு, தத்தெடுப்பு குழுவின் முன் வரும்போது அரசு மருத்துவமனையிலிருந்து ஒரு சுகாதார சான்றிதழ் அளிக்குமாறு கேட்டுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பு சிகிச்சை நிபுணர் இத்தம்பதியினர் குழந்தையைத் தத்தெடுக்கத் தகுதியற்றவர்கள் என்று கூறினார். ஆனால் மருத்துவக் குழுவின் தலைவரின் இறுதி பரிந்துரையில், இருவரும் மாற்றுத்திறனாளிகள் ஆனாலும் தத்தெடுத்த பிறகு குழந்தையைப் பராமரிக்க முடியும் என்று தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தில் உள்ள ஒரு சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்தில் நான்கு மாத குழந்தையைத் தத்தெடுக்கச் சென்றவர்களை ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு இறுதி பரிந்துரையைப் புறக்கணித்து எலும்பு சிகிச்சை நிபுணரின் கருத்தை மட்டுமே கருதி விண்ணப்பத்தை நிராகரித்தது.
குறிப்பாக முதல் இரண்டு ஆண்டுகளில், பராமரிக்க முடியாது என்று கூறி நிராகரித்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவின் தலைவர் இந்த தம்பதியர் குழந்தையைக் கவனிக்க முடியும் என்று பரிந்துரை செய்த போதிலும், குழு நிராகரித்துள்ளது. தத்தெடுப்பு முறை முடிந்துவிட்டது என்று கருதிச் சென்ற அவர்களின் நம்பிக்கைகள் நொறுங்கிவிட்டது என்று கூறுகின்றனர்.
நான்கு வருடம் காத்திருந்த பின்னரும், நான்கு மாத குழந்தையைத் தத்தெடுக்க முடியாமல் தவித்துவந்தனர். இதனை அறிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மாற்றுத்திறனாளி தம்பதியைத் தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கையைக் கேட்டு அறிந்து ஆறுதல் கூறினார். எதற்கும் கவலைப்படாதீர்கள் உங்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 9ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று, மறுபரிசோதனை செய்த மருத்துவர்கள். இவர்கள் 100 சதவீதம் குழந்தையை வளர்ப்பதற்குத் தகுதி உடையவர்கள் என சான்றிதை வழங்கியுள்ளனர். அந்த சான்றிதை மின்னஞ்சல் மூலமாக CARA-வுக்கு அனுப்பி உள்ளனர்.
தம்பதியினர் நான்கு ஆண்டுகள் காத்திருக்கும் பிறகு உடல் பரிசோதனைக்கு உட்பட்டு, தகுதிவாய்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்ட பின்பு குழந்தை இறுதியாக வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தில் உள்ள ஒரு சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்தார், குழந்தையை வேல்மயில் பெற்றோர்களின் உதவியுடன் கவனிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அன்று (23/07/2024) மாலை 5 மணிக்கு குழந்தையை ஒப்படைத்தனர்.