திருச்செந்தூரில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி சோதனை: 3240 கிலோ நாட்டுச்சக்கரை, 386 கிலோ பஞ்சாமிர்தம் பறிமுதல்!!

திருச்செந்தூரில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி சோதனை: 3240 கிலோ நாட்டுச்சக்கரை, 386 கிலோ பஞ்சாமிர்தம் பறிமுதல்!!

திருச்செந்தூரில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு ஆலைகளில் 3240 கிலோ காலாவதி தேதி இல்லாத நாட்டுச்சக்கரை மற்றும் 386 கிலோ பஞ்சாமிர்தம் பறிமுதல். மேலும், உடன்குடியில் உரிய விற்பனை ஆவணங்கள் இல்லாததினால் 75,000 கிலோ சீனி பறிமுதல். மற்றும் 12,500 கிலோ சீனியுடன் 13 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் வைத்திருந்த ஏ.ஏ.ஜே டிரேடர்ஸ் மூடி சீலிடப்பட்டது - நியமன அலுவலர் நடவடிக்கை.

சுகாதாரத் துறை செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப, உணவு பாதுகாப்பு ஆணையர் திரு.லால்வேணா, இ.ஆ.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப ஆகியோரது கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இந்நிலையில், இன்று (23.04.2024) தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் தலைமையில், திருச்செந்தூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் (பொ) திரு.செல்லப்பாண்டி அடங்கிய குழுவினர் திருச்செந்தூரில், பாளையங்கோட்டை சாலையில் உள்ள திரு.கணேசன் என்பவருக்குச் சொந்தமான பஞ்சாமிர்தம் தயாரிப்பு ஆலையை ஆய்வு செய்தனர். அதில் காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள் விபரங்கள் இல்லாத 30 கிலோ அளவிலான 98 நாட்டுச்சக்கரை மூட்டைகளும் (2940 கிலோ), 357 கிலோ பஞ்சாமிர்தமும் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, வணிகரின் பொறுப்பில் வைக்க உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும், பொது சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக அந்நிறுவனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

அதே பகுதியில் இருந்த கணபதி டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தில் கலப்பட பனங்கற்கண்டு தயார் செய்வதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் ஆய்வு செய்யச் சென்றபோது, ஆலை மூடப்பட்டிருந்தது. மேற்படி, உரிமையாளரை அழைத்தும், ஆலையைத் திறக்க அவர் வரவில்லை என்பதினால், சாட்சியங்களைப் பாதுகாப்பதற்காக ஆலையை மூடி சீலிட்டு, அறிவிப்பானது அந்நிறுவனத்தின் கதவில் ஒட்டப்பட்டது. மேலும், திருச்செந்தூரின் சுப்பிரமணியபுரத்தில் உள்ள திரு.வேலாயுதப்பெருமாள் என்பவருக்குச் சொந்தமான முருகவிலாஸ் பஞ்சாமிர்த ஆலையில், லேபிள் விபரங்கள் இல்லாத 300 கிலோ நாட்டுச்சக்கரையும் (10 மூட்டைகள்), 29 கிலோ பஞ்சாமிர்தமும் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, வணிகரின் பொறுப்பில் வைக்க உத்திரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்து, உணவு பாதுகாப்புத் துறைக்கான மாவட்ட நீதிவழித் தீர்வு அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் வழக்கு பதிவு செய்யப்படும். 

அதனைத்தொடர்ந்து, கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், உடன்குடி பகுதியில் உள்ள திருமதி.பிரபாஜோதி க/பெ. பிரபு ஜேகப் ஞானமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான ஏ.ஏ.ஜே டிரேடர்ஸ் என்ற நிறுவனமானது ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாய்வின் போது 13 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உரிய கொள்முதல் மற்றும் விற்பனை விபரங்கள் இல்லாத 50 கிலோ அளவிலான 250 மூட்டைகள் (12,500 கிலோ) சீனி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்ததிற்காக அந்நிறுவனமானது மூடி சீலிடப்பட்டது. மேலும், பிரபு ஜேக்கப் ஞானமாணிக்கம் த/பெ.ஜெயபாலன் என்பவருக்குச் சொந்தமான ஆசிர்வாத் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தினை ஆய்வு செய்தபோது, 50 கிலோ அளவிலான 1500 மூட்டைகள் சீனி இருந்தது கண்டறிந்து, விசாரணை செய்தபோது, உரிய கொள்முதல் மற்றும் விற்பனை விபரங்கள் இல்லாதது உறுதிசெய்யப்பட்டது. எனவே, இந்த சீனி மூட்டைகள் யாவும், கலப்பட பனங்கற்கண்டு தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றதோ என்ற ஐயத்தில், அடுத்தகட்ட விசாரணைக்காக, 1500 சீனி மூட்டைகள் (75,000 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டு,  உரிமையாளரை உரிய ஆவணங்களுடன் நியமன அலுவலர் முன்னிலையில்  விசாரணைக்கு ஆஜராக உத்திவிடப்பட்டுள்ளது.

கலப்படம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதினால், பனங்கற்கண்டு மற்றும் பனங்கருப்பட்டி தயாரிப்பாளர்களுக்கு வீட்டுத்தேவைக்குத் தவிர, சீனியை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது என்று மொத்த விற்பனையாளர்களும் சில்லறை விற்பனையாளர்களும் எச்சரிக்கப்படுகின்றார்கள். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது. 

பொதுமக்களின் பொது சுகாதார நலன் சார்ந்த விடயத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் நுகர்வோருக்கு இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.