கோவில்பட்டியில் பார் ஊழியர் கொலையில் முன்னாள் உரிமையாளர் கைது : பரபரப்பு வாக்குமூலம்!

கோவில்பட்டியில் பார் ஊழியர் கொலையில் முன்னாள் உரிமையாளர் கைது : பரபரப்பு வாக்குமூலம்!

கோவில்பட்டியில் பார் ஊழியர் கொலையில் தேடப்பட்டு வந்த முன்னாள் பார் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரை காந்தி நகரைச் சேர்ந்த முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு இந்திரா நகரை சேர்ந்த குருசாமி (வயது 60) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் மதுபான பாருக்கு வந்த முன்னாள் பார்உரிமையாளரான சிதம்பரம்பட்டியை சேர்ந்த சங்கரபாண்டி குடிப்பதற்கு ஓசியில் மதுபாட்டில் கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சங்கரபாண்டி அரிவாளால் குருசாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகாதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தேடிவந்தனர். 

நேற்று காலை 10 மணியளவில் கோவில்பட்டியை அடுத்துள்ள ஆலம்பட்டி கண்மாய் அருகில் பதுங்கி இருந்த சங்கர பாண்டியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் "ஏற்கனவே கிருஷ்ணா நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரை நான் லீசுக்கு எடுத்து நடத்தி வந்தேன். என்னிடம் பார் ஊழியராக இந்திரா நகர் குருசாமி (60) என்பவர் வேலை பார்த்து வந்தார். அவர் என் குடும்பத்தினரோடு பழகி வந்தார். 

குடும்பத்தாரிடம் குருசாமி நான் சரியாக பாரை கவனிக்கவில்லை, குடித்துவிட்டு தூங்குவதாக புகார் கூறியுள்ளார். இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு நான் நடத்தி வந்த பாரை கோவில்பட்டி காந்தி நகரை சேர்த்த முருகன் என்பவருக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. இதனால் என்னுடைய குடும்பத்தில் பிரச்சினையும், எனக்கு வருமான இழப்பும் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் சம்பவத்தன்று மதுபான பாருக்கு சென்றேன். 

அங்கு குருசாமியிடம் மது குடிக்க பணம் கேட்டேன். அவர் தர மறுத்தார். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அங்கிருந்து அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு சென்று விட்டேன்" என தெரிவித்துள்ளார். மேற்கு போலீசாரிடம் சங்கர பாண்டியை தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய மேற்கு போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.