தூத்துக்குடி அரசு மருத்துவமனை – அனைத்து வாசல்களையும் 24 மணி நேரம் திறக்க BJP இளைஞரணி கோரிக்கை!

தூத்துக்குடி அரசு மருத்துவமனை – அனைத்து வாசல்களையும் 24 மணி நேரம் திறக்க BJP இளைஞரணி கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனைத்து வாசல்களையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது VVD சிக்னல் அருகே உள்ள பிரதான வாசல் மட்டுமே இரவு பகல் செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் அந்தப் பகுதியில் ஆம்புலன்ஸ் வருகை மற்றும் நோயாளிகள் செல்லும் பணிகள் தடைபடுவதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் திருச்செந்தூர் பிரதான சாலை மற்றும் சுப்பையா முதலியார்புரம் தெருவில் அமைந்துள்ள மற்ற இரண்டு வாசல்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறக்கப்படுகின்றன. குறிப்பாக, சுப்பையா முதலியார்புரம் வாசல் ஆம்புலன்ஸ் செல்லும் நேரங்களில் மட்டும் திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் A. சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார். குறைந்தபட்சமாக காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரை அனைத்து வாசல்களையும் திறந்து வைக்க வேண்டும் என்றும், தாய்பேறு பிரிவில் உள்ள லிப்ட் 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தரமான குடிநீர் மற்றும் மின் விளக்கு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கை மனு இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. நிகழ்வில் சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் முத்து பெரியநாயகம், மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய் அன்னராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.